சொந்தமில்லை
பந்தமில்லை வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாருமில்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்
இளையராஜாவின் முதல் திரைப்படமாக வெளிவந்த அன்னக்கிளி திரைப்படத்தில் சுசீலா பாடிய இனிய கீதம் . சோகத்தை பிழிந்து நெஞ்சத்தை கிழித்து கண்ணீரை வரவழைக்கும் ஒரு இனிய பாடல் . அக்கக்கோ எனும் வரியில் வழியும் சோகத்தினை அவரை தவிர வேறு யாராலுமே பாட இயலாது.
வாழ்வில் சோகத்தை தவிர வேறு எதையும் காணாத ஒரு பெண், அடைய நினைத்த சிறு மகிழ்வும் வேறு ஒருத்திக்கு விட்டுக்கொடுக்கப்பட வேண்டிய சூழலை தன் இனிய குரலால் ப்ரதிபலிக்கிறார் அம்மா .
கோவிலுண்டு தீபமுண்டு
தெய்வமுண்டு மலர்களுண்டு
பூஜை மட்டும் காண வரம் இல்லையே.
ஓடம் உண்டு நதியும் உண்டு
நதியினிலே வெள்ளம் உண்டு
அக்கரைதான் அருகில் வரவில்லையே
இக்கரையில் குருவிக்கென்ன வேலையே !
அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம் !!என்று இழைக்கும் போது கரையாத மனமும் கரையும். கனியாத கல்லும் கசியும்,
வாழ்வில் துயரமே நிலையாய் துயரமே வாழ்வாய் வாழ்ந்த அவள் தான் எதற்கும் பயன் படாமல் போனதை எண்ணியும், தன் வாழ்வு துன்பக்கடலில் வீழ்ந்ததை எண்ணியும் பாடுகிறாள் இப்படி .
பூவென்றால் தேனை வைத்து
பழத்துக்குள்ளே சாறை வைத்து
பிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே
பாழும் அந்த குருவி என்ன
பாவங்களே செய்ததென்று
பரிசாக கண்ணீரை தந்தானே
நாள் முழுதும் கண்ணீரை தந்தானே
அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம் !!
பாழும் அந்த குருவி என்ற வரியில் பாழும் என்ற சொல்லில் அம்மா காட்டும் பாவம் நம்மை வேறு உலகத்துக்கே கொண்டு செல்லும் சக்தி படைத்தது .
இனி தன்னால் எதுவுமில்லை தனக்கும் எதுவுமில்லை என்னும் கழிவிரக்கம் ததும்பும் இப்பாடலை தன் தேன் குரலால் பாடுகிறார் அம்மா. இந்த பாட்டை சில திரை அரங்குகளில் தடை செய்ததாகவும் பின் மீண்டும் இணைத்ததாகவும் கேள்வி பட்டு இருக்கிறேன். என்ன இருந்தாலும் அம்மாவின் பாடல்களில் இது ஒரு வஜ்ரம் என்றால் அது மிகை இல்லை. மணிமகுடம் சூட்டிய ஒரு பாடல் என்றாலும் மிகை இல்லை. என்னை கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இது உங்கள் பார்வைக்கு.
அமுதம் தொடரும்.....
அமுதம் தொடரும்.....
Very true. Beautiful explanation. Lovely song
ReplyDelete