Thursday, 20 October 2016

வாழிய தமிழ்! வாழிய தமிழ்!!

வாழிய தமிழ்! வாழிய தமிழ்!!
http://www.muthukamalam.com/picture/books.jpg
உலகத்தின் உயர்மொழியை உருவாக்கிய தாரப்பா?
உயரிய நாகரீக நகரமந்த அரப்பா!

தமிழ்மொழியின் தாய் மொழியை ஆக்கியதாரோ?
தங்கநதி சிந்து ஓடும் அழகிய மொகஞ்சதாரோ!

இமயமுதல் குமரிவரை இருந்ததெந்த மொழி?
இன்னமுதச் சுவைசேர்ந்த எங்கள் தமிழ்மொழி!

திராவிடத்தின் மூத்த தலைமுறையானவள் எவள்?
தீன்சுவையின் தென்றலென பாடிடுந்தமிழ் அவள்!

வந்தாரை வாழவைக்கும் நாடு எந்த நாடு?
வள்ளண்மை சிறந்து நிற்கும் எங்கள் தமிழ்நாடு!

முத்தமிழும் முழங்குகின்ற தேசம் எந்த தேசம்?
மூவேந்தரும் ஆட்சி செய்த மூவாத் தமிழ் தேசம!

பூதலத்தின் புகழ்வாய்ந்த சக்திமொழி எது?
புண்ணியங்கள் விளைக்கின்ற பக்தித் தமிழ் அது!

அறம்பொருள் இன்பம் எல்லாம் அள்ளித்தந்தவர் எவர்?
அன்புமொழியை பரப்பிடும் நம்மாசான் திருவள்ளுவர்!

மன்னருக்கு அறம்கூறி மகிழ்ந்ததெந்த அடிகள்?
மாசில்லா சிலம்பைத்தந்து மகிழ்ந்த இளங்கோவடிகள்!

கற்புநெறியை மேதினியில் மேவியதெவ் வும்பர்?
கரவிலா இராமாயணம் படைத்துத் தந்த கம்பர்!

பாரதத்தில் தமிழை உயர்த்திப் பாடியது யார்?
பாரெங்கும் புகழ் மணக்கும் பாரதியார்!

நூல்களினை அச்சிலேற்றி நுவற்றியதெந் தாதன்?
நுண்மாண் நுழைபுலம் கொண்ட எங்கள் சுவாமிநாதன்!

குவலயத்தின் குளிர்மொழியாம் அறமென்னும் ஆழி
குன்றாதப் புகழுடனே குன்றேறி வாழி!
- எஸ்.இளங்கோவன்.


No comments:

Post a Comment