Thursday, 20 October 2016

வேலைவாய்ப்புக்கு என்ன செய்யலாம்?



வேலைவாய்ப்புக்கு என்ன செய்யலாம்?

எஸ். இளங்கோவன்

முன்னுரை

"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு"

"
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு"

- என்று ஒரு நாட்டின் பெருமையையும், ஒரு நாடு இருக்க வேண்டிய முறைமையையும் கூறுவார் திருவள்ளுவர். நாம் நாடிச் செல்லாமல், அனைத்து வகைச் செல்வங்களும் நம்மை நாடி வருவதே சிறந்த நாடு என்கின்றார் அவர். ஆனால் இன்றோ "பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும்" ஏற்பட்டு, வந்தாரை வாழ வைக்கும் நம் இந்திய பூமியில் சொந்த நாட்டு மக்களே வேலையின்றித் தவித்தும், வெளிநாடுகளுக்கு ஒடியும் பிழைக்க வேண்டி உள்ளது. "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற பழமொழி சிறந்ததே என்றாலும், இதன் உட்பொருள் உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது என்பதேயாகும். அதாவது வெளிநாட்டுக்குப் போ என்பதுதான். அப்படிப் பல துன்பங்களையும் தருகின்ற வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கவும், நம் வாட்டத்தைப் போக்கவும் நாம் செய்ய வேண்டுவது என்ன என்பதே இக்கட்டுரையின் நோக்கம் எனலாம்.

வேலையில்லாத் திண்டாட்டம் ஏன்?

ஏனிந்த வேலையில்லாத் திண்டாட்டம்? பல ஆயிரம் இளைஞர்களின் மனதில் தாம் தம் வீட்டுக்கும், நாட்டுக்கும் பாரமோ என்ற ஊசலாட்டம். இதற்குப் பதில் இதுதான் என்கிறார் ஒரு கவிஞர். "ஒவ்வொருவரின் முன்னும் ஆயிரமாயிரம் வெற்றி வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால்? அவை நமது கண்ணுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் நமது மனது திறந்த நிலையிலில்லை, சிறந்த நிலையிலும் இல்லை. நமக்கு நாமே சில எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொண்டு அவற்றை மட்டுமே தேடி வருகின்றோம். இவ்வாறு நமக்கு நாமே திரை போட்டுக் கொள்வதால் எதிரே உள்ள ஏணிப்படிகள் கண்ணுக்குத் தெரிவதில்லை.

எனவே, நாம் முதலில் நமது தகுதிக்கேற்ப வெள்ளை ஆடை (White Collar) உத்தியோகங்களைத் தேடுவதை விட, எதிர்காலத்தில் உருவாகப் போகின்ற வேலைகளை, வேலை வாய்ப்புகளை முன் கூட்டியே எதிர்பார்த்தும், தற்காலத்தில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு உரிய தகுதிகளை உருவாக்கிக் கொள்வதும், உடலுழைப்புக்கு அஞ்சாமலிருப்பதுமே வேலை இல்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்கும் முதல் வழியாகும்.


கல்வி முறையில் மாற்றம்

"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை" என்று தெய்வப்புலவரும், "உட்பொருளை அறியாமல் பகவானை அடையும் பொருட்டு செய்யும் சாஸ்திரப் பயிற்சியை விட சாத்திரஙகள் மூலம் கிடைக்கும் ஞானம் அதாவது கல்வி சிறந்தது" என்று _கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய கீதையிலும் கூறுகின்றனர்.

இங்கு ஞானம் அல்லது கல்வி என்றால் சத்சங்கத்தாலும், சாத்திரப் படிப்பாலும் உண்டாகும் அறிவு என்று பொருளாகின்றது. "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று ஒளவையும் கல்வியின் சிறப்பை விளக்குகின்றார். எனினும், தற்போது நமது மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்கள் கற்கும் கல்வியானது மெக்காலே கல்வி எனப்படும் மனப்பாடக் கல்வியே ஆகும்.

இக்கல்வியில் சில நன்மைகள் இருப்பினும், அதிகளவில் தீமைகளே இருக்கின்றன. முதலில் இது முழுமையான தன்னம்பிக்கை உடைய ஒரு மனிதனை உருவாக்கும் கல்வியே அல்ல. வெறும் எதிர்மறைக்கல்வி ஆகும். "குழந்தை பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றது. அங்கே அவன் முதலில் தன் தந்தை ஒரு முட்டாள் என்று படிக்கின்றான். இரண்டாவதாக தன்னுடைய பாட்டன் ஒரு பைத்தியம் என்று கற்கின்றான். மூன்றாவதாகத் தன்னுடைய ஆசிரியர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று பயில்கின்றான். நான்காவதாக எல்லா சாத்திரங்களும் பொய் என்று ஓதுகின்றான். அவனுக்குப் பதினாறு வயது வரும் பொழுது அவன் எதிர்மறையானவனாயும், உயிர்த்துடிப்பு இல்லாதவனாயும், முதுகெலும்பைக் கழற்றி விட்டவனாயும் ஆகின்றான். இக்கல்வி முறையானது சுயசிந்தனை உடைய ஒருவனைக் கூட உற்பத்தி செய்யவில்லை.

சுயசிந்தனை இல்லாதவனால், பிற வேலை வாய்ப்புக்களைப் பெறவோ, சுயவேலை வாய்ப்புக்களை உருவாக்கவோ இயலாது. ஏனவே, வேலை வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட சிறந்த கல்வி முறை வருதல் வேண்டும். நாம் அதனை முயன்று நம் பாரத தேசத்திற்கேற்ப உருவாக்கல் வேண்டும். இது மிகப்பெரும் திட்டம் என்ற போதிலும் இதனை நாம் உருவாக்கியே தீர வேண்டும். இக்கல்வி முறையில் மாற்றத்தைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.


தேவையான கல்வி

"நம்பிக்கையும், நல்லொழுக்கமும், நிறைந்த புகழும், பொருளும் நிறைந்து இருப்பவன் செல்லுமிடம் எங்கேனும் மதிப்பைப் பெறுவான்" எனும் புத்தரின் வாக்கிற்கேற்ப நம்பிக்கையும், நல்லொழுக்கமும் நிறைந்து புகழும் பொருளும் கிடைக்கக் கூடிய கல்வி முறையாலேயே வேலையில்லாத் திண்டாட்டம் தீரும்.

திணிக்கப்படாத கல்வி

"கல்வி என்பது நம் மூளையில் திணிக்கப்பட்டு குழப்பத்தை விளைவித்துக் கொண்டு, வாழ்நாள் முழுதும் ஜீரணம் ஆகாத செய்திகளைப் பெறுவதும் அல்ல. வாழ்க்கையை உருவாக்குகின்ற, ஒழுக்கத்தை உருவாக்குகின்ற கருத்துக்களை ஜீரணிக்கச் செய்து கொள்ளும் கல்வியே நமக்கு வேண்டும். சந்தனக் கட்டையைச் சுமந்து செல்லும் கழுதை அதன் கனத்தை மட்டுமே அறியும். மதிப்பை அறியாது அல்லவா? எனவே, நம் நாட்டின் ஆன்மீகக் கல்வியும், பொதுக்கல்வியும் நம் சொந்தக் கைகளில் இருக்க வேண்டும். நடைமுறைக்குத் தகுந்த முறையில் அது தேசிய வழியிலும், தேசிய அமைப்பின் மூலமும் தரப்பட வேண்டும் என்று சுவாமி விவேகாநந்தர் கூறியது போல கல்வி முறை தரப்படல் வேண்டும். அதன் மூலமும் வேலை வாய்ப்புகள் உருவாகி, வேலையின்மை குறைவிற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

சோம்பலுக்கு இடங்கொடேல்

"மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்". அதாவது ஒருவனிடம் சோம்பல் வந்து சேர்ந்தால் அது அவனை பகைவர்க்கு அடிமை ஆக்கி விடும் என்கின்றார் வள்ளுவர். இதனை நமது இந்திய வரலாறே நமக்குச் சுட்டிக் காட்டும்.

நல்ல சிறந்த பணியைத் தேடும் இளைஞர்கள் சோம்பலுக்கு மறந்தும் இடம் தந்திடக் கூடாது. சோம்பல் ஒரு அரேபிய ஒட்டகத்தைப் போன்றது. தலையை நீட்ட இடம் தந்தால் பிறகு அது நம்மையே தோல்விக்குள் தூக்கி எறிந்து விடும். எனவே, சோம்பலை விட்டுவிட்டு கடுமையாக உழைக்க வேண்டும். முழுமையான உழைப்பு இன்றி யாராலும் வெற்றிக் கனியை பறிக்க இயலாது அன்றோ. எனவே, வேலைவாய்ப்பை வேண்டுவோரும், வேலைகளைத் தேடுவோரும், வேலை வாய்ப்பை உருவாக்க எண்ணுவோரும், தம் ஒவ்வொரு மூச்சிலும் உழைப்பு, உழைப்பு என்றே உச்சரிக்க வேண்டும். அதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கி, வேலையின்மையைத் தீர்க்க வேண்டும்.


முயற்சியின் விளைவு

பற்றற்றவனாயும், நான் என்ற அகங்காரத்தைக் காட்டும் சொல்லைக் கூறாதவனாயும், உறுதியும், ஊக்கமும் உடையவனாயும், செயல் கை கூடுதல், கூடாமை இவற்றில் மகிழ்ச்சி துயரம் முதலிய மாறுபாடுகள் இன்றி ஏற்றுக் கொள்பவனாயும் எவன் இருக்கின்றானோ அவனே எல்லாவற்றிலும் சிறந்தவன் ஆவான். அவன் எடுக்கும் செயல்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவான். இதனையே,

"
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்" என்றார் வள்ளுவர். மேலும், வேலை வாய்ப்பை வேண்டி சுயதொழில் செய்ய விரும்பும் ஒருவனுக்குத் தேவையான குணங்கள் என்பது பிறர்க்கு உதவி, கொடை, இன்முகம், பணிவு, எளிமை, சமத்துவம் கொடுக்கும் குணங்கள் இவையே. இவை வேலை வாய்ப்பைப் பெருக்கும் சாதனங்களாகும்.

வெற்றி வேண்டுமா?

இந்திய நாட்டின் ஒவ்வொரு இளைஞனும் இன்றிலிருந்து அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு புத்திசாலித்தனமாக ஏதாவது ஒரு லட்சியப்பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்பணி எந்தத் துறையைச் சார்ந்ததாக வேண்டுமானாலும் இருக்கலாம். பத்து ஆண்டுகளுக்குப் பின் அவன் அத்துறையில் நிபுணனாகி விடுவான். பிறகு அவன் கழுத்தில் வெற்றி மாலை தானே வந்து விழும். மேலும், வெற்றி பெற்றோரிடமிருந்து எதை எப்படி பெய்தால் வெற்றி பெறமுடியும் என்பதையும், தோல்வியடைந்தவர்களிடமிருந்து செய்யக் கூடாதவை எவை என்பதையும் முதலில் கற்க வேண்டும். இதற்கு வெற்றி பெற்றோரையும், தோல்வியுற்றோரையும் நாம் கூர்ந்து கவனித்தல் அவசியம். சின்னச் சின்ன வெற்றிகளை அடைய முதலில் முயல வேண்டும். தோல்விகளைக் கண்டு துவளக் கூடாது. தோல்வியின் மூலம் பாடம் கற்க வேண்டும். பிரச்சினைகள் ஏற்படும் போது அதற்குப் பல தீர்வுகளை யோசித்துச் சரியான தீர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் நாம் வெற்றியை அடையலாம். இவ்விடத்தில் வெற்றி என்பதற்கு வேலை வாய்ப்பு அல்லது வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.


இலக்கை அடைய

வேலையால் பிறர்க்கும் பயன் தந்து உதவ வேண்டும். பிறர்க்கு வேலை வாய்ப்புத் தரக்கூடிய வேலையை விரும்புபவன் கடுமையாக உழைத்தல் வேண்டும். உழைப்பு மட்டுமே ஒருவனுக்கு சிறந்த வேலையைத் தர முடியும். வேலையே இல்லை, எங்கிருந்து உழைப்பது என்கிறீர்களா? சிறந்த பணியைத் தேட, நம்மைத் தயார் செய்து கொள்ள, அதாவது தகுதிப் படுத்திக் கொள்ள உழைக்க வேண்டும்.

தாரக மந்திரங்கள்

வேலையையும், வெற்றியையும் அடைய எண்ணும் இளைஞன் சில தாரக மந்திரங்களைக் கடைப்பிடித்தே தீர வேண்டும்.
1.
வம்பு பேசிப் பொழுதைப் பாழ்படுத்தக் கூடாது.

2.
அறியாமையை நீக்கி, அறிவை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.

3.
பொய்மை நீக்கி உண்மையை மட்டுமே பேசுதல் வேண்டும்.

4.
உன் உழைப்பின் பயன் உனக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணுவது போல பிறர் உழைப்பின் பயன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணல் வேண்டும்.

5.
வாடிக்கையாளர்களிடமும், நமது தொழில் தொடர்புடையவர்களிடமும், அன்புடனும், கனிவுடனும், மதிப்புடனும் பேசுதல் வேண்டும்.

-
இவைகளே முன்னேற எண்ணுபவர்களின் தாரக மந்திரங்கள் அல்லது பஞ்ச சீலங்கள் எனலாம்.

வாழ்க்கைக் கல்வி அல்லது தொழிற்கல்வி

வேலை வாய்ப்பைத் தேடுபவனும, வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்க எண்ணுபவனும் வெறும் ஏட்டுப் படிப்பை மட்டும் பயிலக் கூடாது. ஏனெனில், "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதை உணர்ந்து வெறுங்கல்வியை விட வாழ்க்கைக் கல்வி அதாவது, வாழ்க்கைக்குத் தேவையான தொழிற்கல்வியைப் பயிலுதல் வேண்டும். மேலும், ஒரு தொழிலைச் செய்யும் போது அதற்குத் துணையான சில உபதொழில்களையும் மேற்கொள்ள வேண்டும்.

"
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று" என்பதற்கேற்ப ஒரு தொழிலைச் செய்து கொண்டே மற்றொரு தொழிலையும் செய்வது, ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பதற்குச் சமம் என்கிற வள்ளுவரின் சொல்லை மறவாது பின்பற்றினால் வேலைவாய்ப்பும் பெருகும். வேலையின்மையும் ஒழியும். பொருளும் சேரும். சேர்க்கும் பொருளை தீமையில்லா வழியில், சேர்க்கும் திறமறிந்து சேர்க்க வேண்டும். இதனையே குறளும்,

"
அறன்ஈனும் செல்வமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்" என்று உரைக்கின்றது.

தேவை கல்வி நிலையங்கள்

நாம் மேற்கண்ட தொழிற்கல்வி அல்லது வாழ்க்கைக் கல்வியைத் தரக் கூடிய சிறந்த கல்வி நிலையங்கள் முக்கியமாக கல்வியை வியாபாரமாக்காத கல்வி நிலையங்கள் நமக்கு இன்றியமையாத தேவையாகும்.

"
ஆலைகள் வைப்போம். கல்விச் சாலைகள் வைப்போம்" என்றார் பாரதியார். அப்படி நாம் உருவாக்குகின்ற கல்வி நிலையங்கள் வாழ்வுக்குத் தேவையான கல்வியைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை மற்றும் முயற்சியாக மாற வேண்டும். இதன் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம் நீங்கி நமது இந்தியத் திருநாடு முன்னேறினால், நமது சமுதாயச் செல்வங்களான இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் நீங்கினால் நமது இந்தியர்களைப் போல மட்டற்ற மகிழ்ச்சி கொள்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.


உற்பத்திப் பெருக்கம்

"ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்" என்ற பாரதி பாடலை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோமானால் நமது பாரத நாட்டில் தொழிற் புரட்சி ஏற்பட வேண்டும். உற்பத்தி பெருக வேண்டும். அவ்வுற்பத்தியின் மூலம் நாம் தன்னிறைவு பெறவேண்டும் என்பதும் புலப்படும். இவ்வாறான உற்பத்தியும், ஆலைகளும் பெருகினால் வேலையின்மை நமது நாட்டை விட்டு நாலு கால் பாய்ச்சலில் ஓடிவிடும்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்

"சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் எல்லாம் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.
இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்"

என்றார் நமது தேசியக் கவி. வேலை வாய்ப்பைப் பெருக்கக் கூடிய கல்வி முறைகளும், கலை முறைகளும் நமது நாட்டுக்கு வர வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கக் கூடிய நல்ல நூல்கள், நமது தமிழ் மொழியில் மட்டுமல்ல, பிற இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் பெயர்க்கப்பட்டு, பயன்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் வேலையின்மை என்னும் தொல்லையை நாம் விரட்ட முடியும்.

ஒரு இளைஞன் எப்படி இருக்க வேண்டும்?

முற்றிலும் அச்சம் நீங்கியவனாக இருத்தல், தூய்மை பெற்றவனாக இருத்தல், கொண்ட லட்சியத்தில் முற்றிலும் நிலை பெற்றிருத்தல், புலனடக்கம், நல்வழி செல்லுதல், கற்றல், கற்பித்தல், பகவத் பக்தி, நன்னெறிகளைக் கடை பிடிப்பதில் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்தல், நேர்மை, மனம். மொழி, மெய்களால் யாருக்கும் தீங்கு இழைக்காதிருத்தல், உண்மைகளை இனிமையாக எடுத்துரைத்தல், தனக்குத் தீமை செய்தோரிடமும் கோபமின்மை, பற்றின்மை, அமைதி, யாரையும் பழி, குறைகள் கூறாமை, பரிவு, மென்மை, வீண் செயல்கள் செய்யாதிருத்தல், பொலிவு, பெருமை, தற்பெருமை பாராட்டாமை ஆகிய குணங்கள் கொண்டவராக ஒரு இளைஞன் இருத்தல் வேண்டும். பகட்டு, ஆடம்பரம், டாம்பீகம், இறுமாப்பு, தற்பெருமை, கோபம், கடுமை, அஞ்ஞானம் முதலிய தீய குணங்கள் கொண்ட இளைஞர்கள் நமக்குத் தேவையல்ல. அவர்கள் அவ்வாறு இருக்கவும் கூடாது. அவர்களைத் திருத்தவும் வேண்டும்.

சிறு நாடுகளும், பெரு நாடுகளும்

சிறியதாக மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற நாடுகள், மிகப் பெரியதாவும் ஒற்றுமை இல்லாமலும் இருக்கின்ற நாடுகளை ஆள்கின்றன. ஏனெனில், சின்னஞ்சிறிய நாடுகட்கு தங்கள் ஆற்றல் முழுவதையும் ஒரே கொள்கையில் குவிப்பது எளிது. அதன் மூலமே அவை வளர்கின்றன, முன்னேறுகின்றன. இதனை, "பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்" பரியது தந்திரங்களைக் கொண்டது என்றாலும் யானையானது தன்னை விடச் சிறிய புலியிடம் தோற்று விடும்." என்கிறார் வள்ளுவர்.

அதுபோல எத்தனை சிறந்த குணங்கள் இருந்தாலும், ஊக்கமும், முயற்சியும் இன்றி சிறந்த குணங்களை ஒருநிலைப்படுத்த இயலாதவனால் சிறந்தவனாக விளங்க முடியாது. ஆனால் எல்லாத் தகுதிகளும் பெற்று, தனது தகுதிகளை ஒருநிலைப் படுத்த முடிந்த நல்ல இளைஞர்களாலேயே வேலையில்லாத் திண்டாட்டம் நீங்கும் என்பதில் ஐயமில்லை.


எப்போது நிறைவேறும்?

இந்தியச் சமுதாயத்தின் இணையற்றச் செல்வங்களான இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்க நாம் பல வழிகளையும், அவ்விளைஞர்களுக்கு வேண்டிய தகுதிகளையும் இன்ன பிறவற்றையும் மேற்கண்ட பகுதிகளில் நாம் கண்டோம். சரி, இக்கனவு எப்போது நிறைவேறும்? என்பதை நாம் நம் சுவாமி விவேகாநந்தரின் அமுத மொழிகள் மூலம் காண்போம். "இனிவரும் ஐம்பது ஆண்டுகட்கு நம் மகத்தான இந்தியத் தாயின் வளர்ச்சியே நம் லட்சியமாக இருக்க வேண்டும். அர்த்தமற்ற சிந்தனைகள் அனைத்தும் நம் மனத்திலிருந்து மறைய வேண்டும். நம் இனமாகிய இந்திய மக்கள்தான் விழித்துக் கொண்டிருக்கும் ஒரே கடவுள். இதனை நினைவில் கொள்ள வேண்டும்." என்று அவர் கூறுவது போல நமது கவனம் வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும், வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்குவதிலும் மட்டுமே இருக்க வேண்டும்.

"
இளமையும் வலிமையும் ஆரோக்கியமும் கூர்மையான அறிவும் உள்ளவர்களே கடவுளை அடைய முடியும்" என்று வேதங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட இளைஞர்களே வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்க முடியும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். அப்படி உருவான வேலை வாய்ப்புகளைச் சரிவரப் பகிர்ந்தளிக்கவும் முடியும்.

முடிவுரை

இளைஞர்களே, "உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி முடிவு செய்ய இதுவே நேரம். நீங்கள் இளமையின் ஆற்றல் பெற்று இருக்கும் போதுதான், தேய்ந்து களைத்துப் போன பொழுது அல்ல. இளைமையின் வேகமும் உற்சாகமும் இருக்கும். இந்த நேரம்தான் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு உரிய நேரமாகும். மேலும் அதற்கான நேரமும் இதுதான். புத்தம் புதிய தொடப்படாத முகரப்படாத மலர்கள் மட்டுமே கடவுளின் திருப்பாதங்களில் வைக்கப்படும். அத்தகைய மலர்களையே அவர் ஏற்றுக் கொள்கிறார். அதனால், உற்சாகம் பெறுங்கள். சண்டைகளையும் மற்றவைகளையும் தேடுவதற்கு நீங்கள் விரும்புவதை விட மகத்தான வேலை சமுதாயத்தின் நன்மைக்காக நீங்கள் உங்களைத் தியாகம் செய்வதே." இதன் மூலமாகப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலையின்மையைப் போக்க முடியும்.

இச்சீரிய பணியின் மூலமாகவே இன்னும் பல வேலை வாய்ப்புகள் ஆணிவேரிலிருந்து கிளைத்தெழும் மரமானது பூத்துக் குலுங்கி நிழல் தருவது போல, சிறந்த பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும். சமுதாயச் செல்வங்களான இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க முடியும். இளைஞர்களை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்ல முடியும்.

*****


No comments:

Post a Comment